புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா துவக்கி வைக்கப்பட்டது.
அதன்படி, கலைத்திருவிழா 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” என்ற தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில், வட்டார அளவில் நடத்தப்பட்டு வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தற்போது நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைத் திருவிழா 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 28.08.2024 முதல் 27.09.2024 வரை நடைபெற்றதில் 2,25,403 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு, வட்டார அளவில் 21.10.2024 முதல் 08.11.2024 வரை போட்டிகள் நடைபெற்றதில் 15,888 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 15.11.2024 முதல் 19.11.2024 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 2,469 மாணாக்கர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் கலைத் திருவிழா (CWNC), மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களில் 21 வகையான குறைபாடுகளில் AUTISM, ID, CP ஆகிய மூன்று குறைபாடுகளுடைய மாணவர்களுக்கு தனியாக போட்டிகள் நடத்தி அதனை வீடியோவாக EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனை வட்டார அளவில் 5 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு போட்டியிலும் 5 இடங்களை தேர்வு செய்தனர். அதேபோன்று அவர்களின் போட்டி வீடியோக்களை மாவட்ட அளவிலான உறுப்பினர்கள் மூலம் பார்க்கப்பட்டு சிறந்து விளங்கிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எனவே, இவ்வாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற்று முதலிடத்தை பெறுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களில் கல்வி நலனில் மிகுந்த அக்கறைகொண்டு எண்ணற்ற கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாணாக்கர்கள் கல்வியினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா துவக்கி வைக்கப்பட்டது.
இக்கலைத் திருவிழா போட்டியானது, 1-வது பிரிவில் 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளும், 2-வது பிரிவில் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளும், 3-வது பிரிவில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளும், 4-வது பிரிவில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளும், 5-வது பிரிவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணாக்கர்கள் கலந்துகொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது.
எனவே தமிழக அரசின் மூலம் மாணாக்கர்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு மாணாக்கர்கள் கல்வி உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி), செந்தில் (தொடக்கக் கல்வி), லீலாவதி (தனியார் பள்ளிகள்), முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், உதவித் திட்ட அலுவலர் சுதந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, இளையராஜா மற்றும் எம்.எம்.பாலு, சுப.சரவணன், லதா கருணாநிதி, தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.