சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் அரசு மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.
சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக மருத்துவர்கள் மீதான தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. கடுமையான மருத்துவ சட்டங்களால் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது, ஆனால் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் குறையவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துர்கள் சங்கத்திடம் பேசிவருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.