தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் டெல்லியில் டிச.6, 7 தேதிகளில் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கமும் நடத்தவுள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு 2009ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதில் ஒப்புதல் பெற்று இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். முன்னதாக முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. இந்த குழுவின் அறிக்கை போதிய ஆதாரங்கள், தரவுகளைக் கொண்டதாக இல்லை.
அதனால், கடந்த 14 ஆண்டுகளில் அரசு வேலை வாய்ப்புகளில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்கி, தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளது. ஆதி திராவிடர் பட்டியலில் 76 சாதிகள் உள்ளன. இந்த சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் எந்தளவு பங்களிப்பு உள்ளது என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த சாதிகளில் எந்தப் பிரிவினர் கூடுதல் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
எந்தப் பிரிவினர் குறைவான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பது தெரியும். இதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். உள் இடஒதுக்கீடு வழங்கி 10 ஆண்டுகள் ஆன பிறகு இந்த இடஒதுக்கீட்டால் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் எந்தளவுக்கு பயன் பெற்றுள்ளனர் என்பது உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு நபர் விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதன்படி ஆய்வு நடத்தவில்லை. எனவே, தமிழகத்தில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் டெல்லியில் டிச.6, 7 தேதிகளில் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கமும் நடத்தவுள்ளோம்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.