களப்பயணமாக சித்தன்னவாசல் மற்றும் குடுமியான்மலை சென்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாக குடுமியான்மலை மற்றும் சித்தன்னவாசல் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

பள்ளியின் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் சுமார் முன்னூறு மாணவர்கள் முதலில் குடுமியான்மலைக்குச் சென்று சுமார் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோயில்களையும், புகழ்பெற்ற இசைக் கல்வெட்டுகள் மற்றும் ஆயிரம்கால் மண்டபத்தையும் கண்டு வியந்தனர். மலையில் வரிசையாக அழகாக செதுக்கப்பட்டிருந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு குடுமியான்மலைக் கல்வெட்டுகளின் வரலாறுகளையும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து சித்தன்னவாசல் குகை ஒவியங்களைப் பார்வையிட்டனர். அங்கே பரமசிவம் என்ற காப்பாளர் மாணவர்களுக்கு பாறைகளில் வரையப்பட்டிருந்த தாமரைக்குளம். அரசன், அரசி, அன்னப்பறவை, மீன் போன்ற ஓவியங்களை காணச் செய்தார். இந்த ஓவியங்கள் சமண முனிவர்களால் மூலிகைகளைக் கொண்டு 1200 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டவை. கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள். இவை வட இந்தியாவின் அஜந்தா குகை ஒவியங்களை அடுத்து தமிழ்நாட்டில் புதுக்கோட்டைக்குப் பெருமையும் சிறப்பும் சேர்ப்பவை என்று குறிப்பிட்டார்.

களப்பயணத்தில் பங்பெற்ற மாணவி கூறும்போது “சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் படங்களாகப் பார்த்த ஒவியங்களை, சிற்பங்களை, குடைவரைக் கோயில்களை நேரடியாக் கண்டு மகிழ்ந்தோம். இந்தக் களப்பயணம் எங்களுக்கு வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ள பயனுள்ளதாக அமைந்தது” என குறிப்பிட்டனர். இந்தக் களப்பயணத்தில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், மற்றும் ஒருங்கிணைப்பாளர் வரலெட்சுமி உள்ளிட்ட வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் பள்ளி இயக்குநர் சுதர்சன் ஆகியோர் மாணவர்களை களப்பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.