“மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளது” என்று அம்மாநில எதிர்க்கட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாடியை பிரதமர் மோடி தாக்கியுள்ளார். மேலும், ஊழலின் மிகப் பெரிய வீரர்கள் என்றும், மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் என்றும் சாடியுள்ளார்.
அடுத்த வாரம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் சந்திராபூர் மாவட்டத்தின் சிமுரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது: “உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி மராகாஷ்டிராவின் வளர்ச்சியை முடக்குகிறது. சந்திராபூர் மக்கள் பல ஆண்டுகளாக ரயில் இணைப்பு வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் மற்றும் அகாடி கூட்டணி அதற்கு அனுமதிக்கவில்லை.
மகாராஷ்டிராவின் விரைவான வளர்ச்சி மகா விகாஸ் அகாடிக்கு சாத்தியமில்லாதது. அவர்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதில் மட்டுமே முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் காங்கிரஸ் இரண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளது. அகாடி என்றால் ஊழலின் மிகப் பெரிய வீரர்கள் என்று பொருள். அடுத்த 5 ஆண்டுகளில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கான உத்தரவாதமாக மாறும். மாநிலத்தில் மகாயுதி கூட்டணி மற்றும் மத்தியில் என்டிஏ கூட்டணி என்பதற்கு மகாராஷ்டிராவில் இரட்டை இஞ்சின் ஆட்சி என்று பொருள், அதற்கு வளர்ச்சி இரட்டை வேகத்தில் இருக்கும் என்று அர்த்தம்.
தாங்கள்தான் நாட்டை ஆளப் பிறந்தவர்கள் என்பதே காங்கிரஸின் அரச குடும்ப மனநிலையாகும். சுதந்திரத்துக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்தை அனுமதிக்கவே இல்லை” என்று பிரதமர் மோடி பேசினார். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.