வழக்குகளை அவசர வழக்குகளாக பட்டியலிடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் வாய்மொழி சமர்பிப்புப்புகளுக்கு இனி அனுமதியில்லை என்றும், அதற்காக மின்னஞ்சலோ, கடிதமோ அனுப்பப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமாக, அன்றைய நாளின் வழக்குகள் பட்டியலிடப்படுதவற்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பு, வழக்கறிஞர்கள் தங்களின் வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க வேண்டுகோள் விடுப்பர். இதுகுறித்து தலைமை நீதிபதி கூறுகையில், “இனி வழக்குகளின் அவசர விசாரணைக்கு எழுத்துபூர்வ அல்லது வாய்மொழி கோரிக்கைகளுக்கு அனுமதி இல்லை. மின்னஞ்சல் அல்லது எழுத்துபூர்வமான கடிதம் அளிக்கப்பட வேண்டும். அவசர தேவைக்கான காரணங்களை மட்டும் கூறிப்பிட்டால் போதும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வெளியிட்ட தனது முதல் அறிக்கையில் கூறுயிருப்பதாவது: நீதித்துறை என்பது ஆளும் அமைப்பின் ஒருங்கிணைந்த அதே நேரத்தில், தனித்துவமான மற்றும் சுதந்திரமான அமைப்பாகும். அரசியலமைப்பு நம்மீது நம்பிக்கை வைத்துள்ளது. அரசியலமைப்பு பாதுகாவலரின் பங்கு என்பது, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் நீதி வழங்குபராகவும் இருத்தல் என்ற முக்கியமான பொறுப்பினை நிறைவேற்றுவதே.
அனைவரையும் சமமாக நடத்துவதன் அடிப்படையில் நீதி வழங்கும் கட்டமைப்பில் செவ்வம், அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வெற்றிபெறும் வகையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் பக்கச்சார்பு இல்லாத தீர்ப்பு ஆகியவைகள் தேவைப்படுகின்றன. இவை நமது அடிப்படைக் கொள்கைகளைக் குறிக்கிறது.
எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பானது, குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பவர்களாகவும், சர்ச்சைகளைத் தீர்ப்பவர்களாகவும் எங்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. நமது நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க செய்வது நமது அரசியலமைப்பின் கடமையாகும். குடிமக்களுக்கு புரியும் படியான தீர்ப்பினை வழங்குவது மற்றும் சமரசத்தை ஊக்குவிப்பது ஆகியவையே முன்னுரிமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.