முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக ஒருபோதும் அனுமதிக்காது : அமித் ஷா

பாஜகவின் ஒரு எம்எல்ஏ இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காங்கிரஸ் கட்சி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு கட்சி. அந்த கட்சி பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகிறது. பாஜகவின் ஒரு எம்எல்ஏ இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் வீட்டில் இருந்து ரூ. 35 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ஒருவரின் வீட்டில் இருந்து ரூ. 350 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவை யாருடைய பணம்? தன்பாத்தின் இளைஞர்கள் மற்றும் தாய்மார்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் இது. தொடர்ந்து இதுபோல் கொள்ளையடிக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் பாஜக அரசை அமையுங்கள். நாங்கள் அவர்களை பார்த்துக்கொள்கிறோம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. நில ஊழல், சுரங்க ஊழல் என இந்த அரசு ஊழல் அரசாக உள்ளது.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவோம். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,100 வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 500-க்கு நிர்ணயம் செய்யப்படும், தீபாவளி மற்றும் ரக்சா பந்தன் விழாக்களின்போது 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 2,000 நிதியுதவி வழங்கப்படும், நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3,100க்கு கொள்முதல் செய்யப்படும், மாற்றத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்.

வங்கதேசத்தவர்கள் ஜார்க்கண்ட்டில் ஊடுருவுகிறார்கள். பழங்குடி பெண்களை 2-3 முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களின் நிலங்களை அபகரிக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு இங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.