சென்னையில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6.6 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6.6 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில், சென்னையில் மழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளோம்.மழைபாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.