புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சி, புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியானது தமிழக அரசின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியை பாராட்டி கேடயம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் வழங்கி வருகிறது அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் இப்பள்ளிக்கான கேடயம் வழங்கப்பட உள்ளது இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்க உள்ளார். இவ்வாறு சிறந்த பள்ளியாக தமிழக அரசு தேர்வு செய்திருப்பது ஆசிரியர்கள், அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புள்ளாட்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர்கள் கூறியதாவது: கடந்த 1983-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.விசாலமான பள்ளி வளாகத்தைக் கொண்டுள்ள இப்பள்ளியானது இரு வகுப்பறைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சிவ.வீ.மெயய்நாதன் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். அதன் பிறகு, முன்மாதிரி பள்ளியாக திகழும் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டதோடு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணியின் ஆலோசனையுடன், மக்கள் பங்களிப்பில் வகுப்பறைகள், வராண்டா, டாய்லெட் போன்ற பகுதிகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அறைக்குள் பால் சீலிங் அமைக்கப்பட்டது. சுவர்களில் பட்டி பார்க்கப்பட்டதோடு, உயர்தரமான மின்விளக்குகள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டன. மேலும், அரசின் நமக்கு நாமே திட்டம் எனும் திட்டத்தின் மூலம் தொடுதிரை வசதியுடன்கூடிய ஸ்மார்ட் போர்டு பெறப்பட்டது.
மேலும், மேடை, மின்விசிறி, மின் விளக்குகளைக் கொண்ட பிரமாண்டமான கரையரங்கம் அமைக்கப்பட்டது. இத்தகைய பொதுமக்களின் பங்களிப்பில் மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் இணைந்து கொண்டார். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் டிவி, இன்வெர்டர், கூடுதலான இருக்கை வசதிகளும் உள்ளன. அதோடு, பள்ளிக்கு சுற்றுச்சுவர், பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் தளமும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது. கரும்பலகைககள் மாற்றப்பட்டு வெள்ளை நிற பலகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பீரோ, இருக்கை உள்ளிட்ட தளவாட பொருட்களும் பெறப்பட்டுள்ளன. இப்பணிகள் சுமார் 6 மாதங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 1,500 லிட்டர் கொள்ளளவில் 2 குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளன. பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக வீடு வீடாகச் சென்றும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கிக் கூறும் வகையிலான துண்டு பிரசுரங்களை வழங்கியும், பேனர்களை வைத்தும், வாகன விளம்பரம் செய்வதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கச் செய்யப்படுகிறது. பள்ளியில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளினாலும், பள்ளியில் பொதுமக்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாலும், ஆசிரியர்களின் அற்பணிப்புடன்கூடிய கற்பித்தலினாலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. குறிப்பாத, கடந்த 2019-20-ல் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
எண்ணும் எழுத்தும் இயக்கம்: எண்ணும் எழுத்தும் கற்றல் விளைவுகளை துணைக் கருவிகள், படங்கள், கிரீடங்கள், எழுத்து அட்டைகள், சொல் அட்டைகள், பயிற்சிகள் மற்றும் குறைதீர் கற்பித்தல் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என் மேடை, என் பேச்சு உள்ளிட்ட திட்டங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கப்படுகிறது. விளையாடலாம் வாங்க, திறவுகோல், வானம் வசப்படும், தமிழோடு விளையாடு போன்றவை மூலம் எண்ணும் எழுத்தும் பாடம் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்களை தினமும் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களின் தனித் திறமையை அறிந்து அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் மைக் மூலம் ஒலிபெருக்கி பயன்படுத்தி இறை வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் ககை சொல்லுதல், கவிதை வாசித்தல், பாடல் பாடுதல் செய்யப்படுகிறது. இதனால் மேடை கூச்சம் போக்கப்படுகிறது.
அதோடு, வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலை இலக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதன் மூலம் பள்ளியில் உள்ள அதிவேக இன்டர்நெட் மூலம் ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் பாடங்கள் தொடர்ப்புடையவற்றை ஸ்மார்ட் போர்டில் இணைய வழியில் காட்சி படுத்தி கற்பிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் பாடத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசின் அனைத்து வகையான விலையில்லா உபகரணங்களையும் பயன்படுத்தி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்களின் முயற்சியினால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு மாணவர் நாட்குறிப்பு, பெல்ட், டை, எழுது பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் வெளிப்பாடாக பள்ளியில் நடைபெறும் எந்த ஒரு விழாக இருந்தாலும் ஊர் மக்களே கலந்துகொள்வர். பள்ளியை பராமரிப்பதற்காககுடிநீர், சத்துணவு, காலை உணவு, வளாக தூய்மை, கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை தூய்மை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வளாகத்தில் அழகு செடிகள், பழக்கன்றுகள், மூலிகை செடிகள் பராமரிக்கப்பட்டு வருவதால் பள்ளியானது பசுமை பள்ளி வளாகமாக மாறி உள்ளது. பள்ளியை சிறந்த பள்ளியாக தமிழக அரசு அறிவித்து கேடயம் வழங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.