இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்சா – காங்கிரஸ் கூட்டணி பிரிக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியது: “ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணியின் சதி திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சோட்டா நாக்பூர் பகுதியில் ஓபிசி பிரிவு மக்கள் இடையே 125 துணை பிரிவுகள் உள்ளன. துணைப் பிரிவினரை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி அவர்களின் ஒற்றுமையை உடைக்க ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி விரும்புகிறது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான், உங்களுக்கு பாதுகாப்பு. அதிகாரத்தை கைப்பற்ற அந்த கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2004-2014ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட்டிற்கு ரூ.80,000 கோடி மட்டுமே ஒதுக்கீடூ செய்யப்பட்டது. பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஜார்க்கண்ட்டிற்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கி உள்ளோம். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். காங்கிரஸ், ஜே.எம்.எம்., கட்சிகள் இணைந்து மாநிலத்தை கொள்ளையடிக்கின்றன.காங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் புறக்கணிக்கப்பட்டது.
இங்கு நடந்த சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்கள் பணம் உங்களுக்காக மட்டுமே செலவிடப்படும். ஜார்க்கண்ட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பாஜக முறியடிக்கும். ஜார்க்கண்டை உருவாக்கியவர்கள் நாங்கள். அதன் வளமான எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு.
சுதந்திரம் பெற்றதில் இருந்தே எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி ஒற்றுமைக்கு எதிரான கட்சி காங்கிரஸ். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நாட்டை கொள்ளையடித்தது” என்று பிரதமர் மோடி கூறினார்.