“தமிழகத்தில் பால் விற்பனையை 6 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக” தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில்அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “திருப்பூரில் தற்போது தினமும் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. இதை 50 ஆயிரம் லிட்டராக உயர்த்த வேண்டுமென கூறி இருக்கிறோம். பொதுமக்களின் நன்மை கருதி பால் விலையை குறைத்தது திமுக தான். ஆவினில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை ரூ. 25 கோடியை தொட்டுள்ளது. பால் மட்டுமின்றி நெய், பால்கோவா, இனிப்பு வகைகள், மிக்சர் மற்றும் பனீர், ஐஸ்கிரீம் என பல்வேறு பொருட்களை ஆவினில் உரிய தரத்தில் தருகிறோம். கோவையில் ஆவின் பனீர் பிரத்யேக விற்பனை மையத்தை திறக்க உள்ளோம். இவை அனைத்தும் பொதுமக்களின் நன்மைக்காகத் தான். ஆவின் இருப்பதால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை கட்டுப்பாடின்றி உயர்த்தாது.
அரசுப் பள்ளிகளில் காலை உணவு, கட்டணம் இல்லா பேருந்து பயணம் போன்று சமூகத்துக்கு பயனளிக்கும் திட்டமாக ஆவின் உள்ளது. அடிமட்டத்தில் இருப்பவர்களின் நலனுக்காக இந்த அரசு இயங்கி வருகிறது. இந்த அரசின் சாதனைகளாக நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் உட்பட எண்ணற்ற திட்டங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். திமுக அரசு எளிய மக்களுக்கான அரசு.
தமிழகத்தில் பால் விற்பனையை 6 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளோம். திருநெல்வேலி போன்ற பெரிய மாவட்டங்களில் பால் உற்பத்தி குறைவாக இருப்பது தொடர்பாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு பக்கம் விவசாயிகள். மற்றொரு பக்கம் நுகர்வோர் என இரண்டு தரப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. உடனடியாக நுகர்வோரிடம் விலையைக் கூட்ட முடியாது. விவசாயிகளிடம் குறைவான விலைக்கும் பால் கொள்முதல் செய்ய முடியாது. ஆக, அரசாங்கத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
பால் உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஊக்கத்தொகைக்காக ரூ.143 கோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். தமிழகம் முழுக்க செயல்படாமல் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.