தாம்பரம் பகுதியில் தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் விடுதிகளில் போலீஸார் கஞ்சா வேட்டை

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வேட்டை நடத்திய போலீஸார், பிரபல தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், குட்கா உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை முதல், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தினர்.

இன்று காலை 6.00 மணியளவில் தாம்பரம் சரக காவல் உதவி ஆணையாளர் நெல்சன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார், பல்லாவரத்தில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி அமைந்துள்ள ஆர்.கே.வி.அவென்யூ, 2-வது தெருவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த விடுதியின் ஓர் அறையில் இருந்து 20 கிராம் கஞ்சா, 2,400 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் கூல் லிப், குட்கா போன்ற ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றை வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்களான சூடான் நாட்டைச் சேர்ந்த பியார் அபோய் ஆராக் (31), முகமது அல்ஸ்மானே (30), முகமது ஹேதாம் எல்ராயா எல்சிக் (29) மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டம் படித்து வரும் திருச்சி, லால்குடி பகுதியைச் சேர்ந்த ஜாவித் (22) ஆகிய நான்கு பேரை பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்தது யார்? அதனை அவர்கள் தங்களின் உபயோகத்திற்காக வைத்திருந்தார்களா அல்லது சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தனரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய திடீர் கஞ்சா சோதனையில் சூடான் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் நடைபெற்ற கஞ்சா சோதனையில் கஞ்சா, ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேலையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் அருகில் உள்ள விடுதிகளிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதே போன்று கேளம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் நடத்திய திடீர் சோதனையிலும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து போலீஸார் திடீர் சோதனை நடத்தி கஞ்சா வேட்டையில் ஈடுபட்டது, போதைப் பொருள்கள் விற்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.