புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணாவை இன்று நேரில் சந்தித்து, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் நலனிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் இன்றையதினம் நேரில் சந்தித்து, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அதன்படி, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 04.10.2024 முதல் 24.10.2024 முடிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் நமது புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த சிலம்பம், இறகுபந்து, பளுதூக்குதல் மற்றும் குத்துசண்டை விளையாட்டுப் பிரிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு கீழ்கண்டவாறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.1 இலட்சமும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.75,000 -மும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 -மும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு, பளுதூக்குதல் போட்டிகளில் பள்ளி பிரிவில் என்.நகுலன் மற்றும் பரணிதரன் தங்கப்பதக்கமும், கல்லூரி பிரிவில் எஸ்.சண்முகபிரியா மற்றும் மேரிசாமினி வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இறகு பந்து போட்டியில் கல்லூரி பிரிவில் தன்முகில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சிலம்பம் போட்டியில் பள்ளி பிரிவில் மஹாலட்சுமி மற்றும் தவப்பிரியா வெண்கல பதக்கமும், கல்லூரி பிரிவில் ப்ரிதியங்கரா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். வளைகோல் பந்து போட்டியில் பள்ளி பிரிவில் விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் வேங்கடகுள தூய வளனார் பள்ளி மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். குத்துசண்டை போட்டிகளில் கல்லூரி பிரிவில் நர்மதா, அகல்யா தேவி, மாலதி, கீர்த்திகா, சரண்யா வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். இப்போட்டியில் நமது வீரர்கள் மொத்தமாக 14 பதக்கங்களை வென்று பரிசு தொகையாக மொத்தம் ரூ.13,25,000 பெற்று நமது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேலும் தமிழ்நாடு மாடர்ன் பென்டதான் சங்கம் மூலமாக உத்ரகாண்ட் காசிப்பூரில் 14 – 18 ஆகஸ்ட் 2024ல் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் கமலேஷ்நாத், அகிலேஷ்நாத் மற்றும் சந்தோசிகா ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்கள். இவர்கள் மூவரும் எகிப்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மாடர்ன் பென்டதான் நீச்சல் போட்டிகளில் பங்கு பெற்றனர். இப்போட்டிகளில் கமலேஷ்நாத் இரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். கோவாவில் நடைபெற்ற 24 -வது தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் ஈஸ்வரி தங்கப்பதக்கமும் மற்றும் கஜப்பிரியா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.
எனவே அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் இதுபோன்று விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடி உயர்ந்த நிலையினை அடைந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் து.செந்தில்குமார், பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அணி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.