அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என திமுக எம்பி தயாநிதிமாறன் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.15 அன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை தொகுதிக்கு செலவு செய்யவில்லை என குற்றம்சாட்டி விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பிஎன்எஸ்எஸ் அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளேன். எனவே, அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேலும், குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.