புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் எண்ணெய் பனை நடவு விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் இணைந்து நடத்தும், மாபெரும் எண்ணெய் பனை நடவு விழாவில், பனை கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று துவக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம் சார்ந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் இணைந்து நடத்தும், மாபெரும் எண்ணெய் பனை நடவு விழா துவக்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டாரங்களில் சுமார் 60.00 ஹெக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் பனை சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் (NMEO – Oil Palm) எண்ணெய் பனை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாமாயில் பழக்குலைகளுக்கு (Fruit Bunches) மத்திய, மாநில அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை டன் ஒன்றிற்கு ரூ.15,293/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் பனை திட்டமானது கோட்ரேஜ் (Godrej) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்வதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதனால் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம், பராமரிப்பு (4 வருடத்திற்கு) ஊடுபயிர் சாகுபடி செய்தல், எண்ணெய் பனை சாகுபடிக்கான உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் ஆகிய இனங்களின் கீழ் தோட்டக்கலை துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பனை நடவு செய்து மூன்று முதல் நான்கு வருடங்களில் பழங்கள் அறுவடைக்கு வந்துவிடும். நடப்பு நிதியாண்டிற்கு 20 ஹெக்டர் பரப்பு விரிவாக்கம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை, தலைமை சந்தை நிர்வாக மேலாளர் (கோத்ரேஜ்) என்.முத்துசெல்வன், உதவி இயக்குநர்கள் (தோட்டக்கலை) ஏ.காளிச்சரன், அ.விவேக், சி.வி.குமார், உதயகுமார், கார்த்திக் பிரியா, நந்தக்குமார், தினவர்மன், வேலாயுதம், வட்டாட்சியர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ஊராட்சிமன்றத் தலைவர்கள் ராமராசு (பகட்டுவான்பட்டி), ராஜாங்கம் (வீரடிப்பட்டி), எண்ணெபனை சாகுபடி முன்னோடி சீனிவாசன், விவசாயிகள் சுப்பிரமணியன், சீனிவாசன், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.