“வளர்ச்சியே இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வர் என்ன வளர்ச்சியை ஆய்வு செய்ய வருகிறார்?” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 30 பேரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் குமரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோரும், விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 40 பேரும் இன்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “மீனவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது. பக்கிங்ஹாம் கால்வாயில் தடுப்பணைகளை கட்டி 2,000 ஏக்கர் நிலத்தை சாகுபடி செய்யவும், சென்னைக்கு குடிநீர் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல் விழுப்புரம் நகரில் டைடல் பார்க் கொண்டுவர முடிவெடுத்து, அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த அரசு மக்களின் மேல் அக்கறை இல்லாமல் அதை புதுச்சேரி அருகே அமைத்தது. இதனால் இம்மாவட்ட மக்களுக்கு பலனில்லாமல் செய்துவிட்டது. எவ்வித திட்டமிடலும் இல்லாத நிலையில் என்ன வளர்ச்சி இம்மாவட்டத்தில் ஏற்பட்டுவிட்டது என வளர்ச்சியை ஆய்வு செய்ய துணை முதல்வர் இங்கு வருகிறார்? வளர்ச்சி குறித்து விசாரிக்கட்டும். முதலில் கஞ்சா, போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய, செயல்பட முடியாத காவல் துறையை முதலில் செயல்பட வைக்க முயற்சி எடுக்கவேண்டும்” என்று சி.வி.சண்முகம் கூறினார்.