புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 2021ஆம் ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதி வசூல் புரிந்தமைக்காக, தமிழக ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழினை, மாவட்ட வழங்கல் அலுவலர் (ஓய்வு) எஸ்.ஆர்.சுப்பையாவுக்கு மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான கொடிநாள் இலக்கினை முழுமையாக எய்திய பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலத்துறை) கேப்டன்.விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.