முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95% பணிகள் நிறைவு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

“ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றுன. பேருந்து நிலையம் விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகிற போக்குவரத்து துறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. அந்தவகையில், தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையம், விழாக்காலங்களில் அதிகமான பயணிகள் பயன்படுத்துகிற பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், திட்டமிடுதல் இல்லாமல் இருந்தது.

புதிதாக பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, பயணிகளுடைய பல்வேறு தேவைகளை கேட்டறிந்து அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி வருகிறது. வரும்காலங்களில், அந்த பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதை அரசு முன்கூட்டியே கணக்கிட்டு கூடுதலாக தேவைப்படுகிற கட்டமைப்புகளை உருவாக்குகிற பணியில், இந்த ஆட்சி முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.

அந்த வகையில், ஆம்னி பேருந்து நிலையம் ஒன்று புதிதாக கட்டப்பட வேண்டும் என்பதை திட்டமிட்டு , ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்று விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கூத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில், அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோல், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ஒரு 7 பேருந்து நிலையங்களை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) எடுத்துள்ளது. அதில், பெரியார் நகர், திரு வி.க.நகர், உதயசூரியன் நகர், முல்லை நகர், அம்பத்தூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக பேருந்து நிலையங்களை வடிவமைக்கப்படுகிறது. பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பெரியார் நகர் பேருந்து நிலையம், தற்போதைய பயணிகளின் தேவைக்கேற்ப கட்டமைக்கப்படும். இந்த கட்டுமானப்பணிகள் முடிந்து இப்பேருந்து நிலையம், வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 18 பேருந்து நிலையங்களின் அடிப்படைத் தேவகைளைப் பூர்த்தி செய்ய சிஎம்டிஏ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகளும் நடந்து வருகிறது. இந்த 18 பணிகளும், ரூ.1200 கோடிக்கு மேல் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 2025 டிசம்பருக்குள் 18 பேருந்து நிலையங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.