பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் பிணைத்தொகையாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார். மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பட்டுள்ள அந்த மிரட்டல் செய்தியில் நடிகர் பணத்தைச் செலுத்த தவறினால் அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் செய்தி கிடைத்ததைத் தெடார்ந்து, மும்பை வோர்லி போலீஸார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடிகர் சல்மான் கான் மற்றும் என்சிபி (அஜித் பவார்) எம்.எல்.ஏ.வும், மறைந்த பாபா சித்திக்கின் மகனுமான ஜீஷன் சித்திக்குக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, 20 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் நொய்டாவின் செக்டார் 39-ல் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் மொகம்மது தாய்யப் என்று தெரியவந்தது. அவர், குர்ஃபான் கான் என்றும் அழைக்கப்படுகிறார். அவர், சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.
முன்னதாக கடந்த அக்டோர் 12-ம் தேதி தசரா கொண்டாட்டத்தின் போது, ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்துக்கு முன்பாக, பாபா சித்திக் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாள் அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. சல்மான் கானுடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். பாபா சித்திக் கொலைத் தொடர்பாக இதுவரை 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது இது முதல் முறை இல்லை. கடந்த 2022-ம் ஆண்டு நடிகரின் வீட்டுக்கு அருகில் மிரட்டல் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 2023, மார்ச்-ல் கோல்டி ப்ரார் சல்மானுக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இந்தாண்டு பன்வேலில் உள்ள நடிகரின் பண்ணை வீட்டில் போலி அடையாளத்துடன் இரண்டு பேர் ஊடுருவ முயன்றனர்.