வரலாற்றில் தீபாவளி

உலகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் குறித்து சிறந்த பெண் ஆளுமைகள் கூறிய கருத்துகள்.

பா.லெட்சுமிதேவி – இயற்கை விவசாயி – அம்பாசமுத்திரம்

புராணமும், சேமிப்பும்

புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒளி தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளே தீபாவளியாகிவிட்டது. கிருஷ்ணர் நரகாசுரன் எனும் கொடியனை அழித்து, மக்களை துன்ப இருளிலிருந்து விடுவித்த நாளே தீபாவளி என்றும், வனவாசம் சென்ற ராமர் திரும்பியபோது மக்கள் தீபங்களை ஏற்றி தங்கள் வாழ்வில் ஒளியாக வந்த ராமருக்கு வரவேற்பு தந்த நாள் என்றும், ஆண் -பெண் சமத்துவத்தை உணர்த்தும் விதமாக ஈஸ்வரன் சக்தி தேவியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த நாள் என்றும், இப்படி பல விதமாக தீபாவளி பற்றி குறிப்பிடுகின்றன. தீபாவளி அன்று அன்னபூரணியை விரதமிருந்து வணங்க, வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படிப்பட்ட தீபாவளி வருவதற்கு ஒரு மாததத்திற்கு முன்பே ஒவ்வொரு வீட்டிலும் குதூகலம் தொடங்கிய காலம் உண்டு. எப்போதும் உறவினர், தோழிகள் என கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விருந்தோம்பல் என்று சிறப்பாக கொண்டாப்படும் பண்டிகை தான்.

ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை என்றாகி விட்டது. காரணம் என்னவென்றால், எனது பிள்ளைகள் கூட மற்ற நாடுகளில் வசிப்பதால், இந்த ஆண்டு வரமுடியாத சூழ்நிலை. ஆனாலும் அந்த நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மாதக் கடைசி நாள் தீபாவளி வருவதால், எல்லோருக்கும் ஊதியம் கைக்கு வந்துவிடும். ஆனால் ஒரு மாத ஊதியத்தையும் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு, செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடும், திருப்திகரமாகவும் வாழ்வார் என்பதை பெரியோர்கள் சொல்வதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆகவே பண்டிகையும் கொண்டாடுவோம், பணத்தை ஒரளவு மிச்சப்படுத்திட வேண்டும்.

அ.இரம்யா, தமிழ் ஓலைச்சுவடிப் படியெடுப்பாளர், தஞ்சாவூர்.

சங்க இலக்கியத்தில் தீபாவளி

பண்டிகைகள் எவையும் சட்டென்று ஒருவரால் உருவாக்கப்படுவதில்லை. நம் முன்னோர்களின் ஆழ் மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் அந்த விழாவின் பெருநோக்கமாக இருக்கக்கூடும். பின்னர் அவை புராண கதைகளாக உருமாறி தத்துவ விளக்கம் பெற்று பல வகையில் மாறி வளர்ந்து கொண்டே வந்திருக்கும் எனலாம். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் தீபாவளி தொடர்பான மிக பழைய சான்று இலங்கையிலேயே தான் கிடைத்துள்ளது. அதாவது 1310-இல் எழுதப்பட்ட சரஸ்வதி மாலையில் தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்று குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. அதையடுத்து திருமலை நாயக்கர் காலத்தில் கி.பி.1623-1659 வரை தமிழகத்தில் தீபாவளி புகழ்பெற தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. தமிழ் இலக்கியங்களில் விளக்கு வழிபாடு தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள சில கருத்துகளை இங்கே திரும்பி பார்ப்பதும் நினைவலைகளை புதுப்பிக்கும்.

இலக்கியத்தில் தீபாவளி என்ற சொல் கி.பி.6ஆம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ஹரிவம்ச புராணம் என்ற சமண இலக்கியத்தில் தான். மாகவீரர் மோட்ச நாள் என்ற ஒன்றை சமண மதத்தினர் அனுசரித்த நாளும், பழந்தமிழர்கள் அனுசரித்த கார்த்திகை தீபமும் இணைந்தே இன்று நாம் கொண்டாடுகிற தீபாவளி பண்டிகைக்கு அடி கோலியிருக்க வாய்ப்புள்ளது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் அமாவாசை நாளான்று விழக்கேற்றி விழிபடும் வழக்கம் இடம்பெற்றுள்ளது.

அமாவாசை நாளான்று இருளாக இருக்கும் என்றும், தீய சக்தி ஏதும் அண்டாமல் இருக்க இன்று நாம் மின் விளக்குகளை ஒளிர விடுவது போல அன்று தீப விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்துள்ளனர் என்றும் எண்ணலாம். கௌமாரத்தில் தீப வழிபாடு அதிகமாக இடம்பெற்றுள்ளது. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையிலும் விளக்கு வழிபாட்டைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் நக்கீரர். ‘இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ நெல்லும் மலருந் தூஉய்க் கைதொழுது’ (நெடுநல்வாடை-42-43)

கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பௌர்ணமிக்கும் தீபாவளி பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் இடைவெளி உண்டு என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குழந்தைகளின் கொண்டாட்டமே பெரியவர்களின் மகிழ்ச்சியாக மாறி மொத்தத்தில் இன்றைய தீபாவளி புறவிருள் அகற்றி அக ஒளி படர விட்டு அகம் மகிழ்வோம்.

சே.சுசிலாதேவி – செயலர்- புதுகைப் பாவை இலக்கியப் பேரவை.

இயந்திர உலகில் தீபாவளி

பள்ளி பருவத்தின் போது,  எங்களுடைய கிராமத்தில் தீபாவளி முதல் நாளான்று ‘சந்தை’ போடுவார்கள். அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். மனதிற்கும் நிறைவாகவும் இருக்கும். நானும் எனது தோழிகளும், பெரும்பாலும் வளையல், பாசி, ஸ்டிக்கர் பொட்டு, வெடி போன்றவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்வோம். காரணம் என்னவென்றால், அப்போது தான் தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா ஆகியோர்களிடம் பணம் அதிகமாக வாங்க முடியும். இந்த அனைத்து பொருட்களும் கிடடத்தட்ட பொங்கல் வரை இருக்கும். சந்தை முடித்து வந்தவுடன், மாலை நேரத்தில் எங்கள் தெருவில் யார் வீட்டில் மருதாணிச் செடி இருக்கிறதோ, அதனை மொத்தமாக பறித்து அரைத்து தோழிகள் வீட்டிற்குக் கொடுத்து விடுவோம். இரவு முழுவதும் அதனை கையில் வைத்திருந்து விட்டு, காலையில் குளிப்பதற்கு முன்பாக கையை கழுவி அந்த வாசனையை நுகர்ந்து பார்க்கும் போது, பூமி குளிர்ந்து அடிக்கின்ற மண் வாசனையை விட மேன்மையாய் இருக்கும்.

அப்பா சீக்கிரமாக எழுந்து விட்டு பின்புறம் உள்ள அடுப்பில் பெரிய தவளை பானை வைத்து வெந்நீர் போட ஆரம்பித்து விடுவார். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு மனைப் பலகை போட்டு அதில் கோலமிட்டு ‘சோவானே சொக்கட்ட மாவானே’ என்று சொல்லி தலைக்கு எண்ணெய் வைத்து உடல் பூராவும் தேய்த்து விடுவார்கள். அந்த எண்ணெய் வாசமும், புத்தாடை நேசமும், பலகார வாசமும் நமக்கு புதிய சுவாசத்தை உண்டாக்கும். இதனைத் தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு, பக்கத்தில் உள்ள இஸ்லாமிய வீடுகளுக்குச் சென்று பலகாரங்களை கொடுத்து மகிழ்வோம். எனக்கு தெரிந்து இது தான் தீபாவளியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பரபரப்பான இயந்திர உலகில காலையில் எழுந்து குளியல் பாதி, சாமி கும்பிடாமலும், புத்தாடையை அடுத்த நாள் அலுவலகம் செல்லும் போது போடுவதும், செல் போனில் மூழ்கி அந்த இனிய நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு தவற விடுகிறோம். ஆனால் நமது பண்டிகைகள் என்பது பாரம்பரியமிக்கது. அதனை சரியான முறையில் கடைப்பிடித்து அடுத்த தலைமுறையினர்களுக்கு கற்றுக் கொடுப்போம்.

தொகுப்பு : பொ.ஜெயச்சந்திரன், திருவரங்குளம்.