ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் உள்ள கிராமம் ஒன்றின் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இரண்டு பேர் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே சுமார் 27 மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக ஆனது.
இம்மூன்று தீவிரவாதிகளில் ஒருவர், நேற்று காலை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே சென்ற ராணுவ வாகன அணிவகுப்பில் ஒன்றாக சென்ற ஆம்புலன்ஸை தாக்கிய போது ராணுவத்தால் மாலைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற இரண்டு தீவிரவாதிகளும் பட்டால்-கோர் பகுதியின் ஜோக்வான் கிராமத்தில் உள்ள அசான் கோயில் அருகே, இந்திய ராணுவம் மற்றும் போலீஸ் குழுக்கள் கூட்டாக நடத்திய இறுதி தாக்குதல் தொடங்கிய இரண்டு மணி நேர இடைவெளியில் இன்று கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இரவு நேரக் கண்காணிப்புக்கு பின்பு இன்று காலையில் ஒரு தீவிர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நமது படைக்கு குறிப்பிடத்தகுந்த வெற்றி கிடைத்தது. இடைவிடாத செயல்பாடுகள் மூலம் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது” என்று ஜம்முவை அடிப்படையாக கொண்ட ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து அதிகாரிகள் கூறும்போது, “கொல்லப்பட்ட தீவிரவாதிகள் கோயிலுக்கு அருகே வெளிப்பட்டு, ராணுவ வாகனங்களை குறிவைக்கும் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இரவு நீண்ட அமைதிக்கு பின்பு பாதுகாப்பு படையினர் காலை 7 மணிக்கு தீவிரவாதிகளுக்கு எதிராக இறுதி தாக்குதல் நடத்தும் நிலை உருவானது. இது துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது.” என்று தெரிவித்தனர்.
இந்தச் சண்டையில் குண்டுக் காயம்பட்ட ராணுவத்தின் வீரம் மிக்க ‘பாந்தோம்’ என்கிற நான்கு வயது நாய், அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தது. ஜம்மு பகுதியில் சமீபத்தில் நடந்து வரும் துப்பாக்கிச் சூடுகள், காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. கடந்த இரண்டு வாரத்தில் 7 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.