“550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தவர் வல்லபாய் படேல்’’ – அமித் ஷா புகழாரம்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு நாடு ஒன்றுபட்டதற்கு நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையும், புத்திசாலித்தனமுமே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் அன்றைய தினம் தீபாவளி என்பதால், 2 நாள் முன்னதாக படேலின் நினைவாக தலைநகர் டெல்லியில் ஒற்றுமை தொடர் ஓட்டத்தை அமித் ஷா இன்று தொடங்கிவைத்தார். இந்த தொடர் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு, நாடு ஒன்றுபட்டதற்கு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையும், புத்திசாலித்தனமுமே காரணம். லட்சத்தீவுகள், ஜுனகர், ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு படேல்தான் காரணம்.

ஆனால், படேல் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை அழிக்கவும், அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட காலமாக அவருக்கு பாரத ரத்னா வங்கப்படவில்லை. 1950ல் இறந்த வல்லபாய் படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து 1991 இல்தான் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, படேலின் மிக உயரமான சிலையை குஜராத்தின் கெவாடியாவில் நிறுவி அவருக்கு உரிய முறையில் மரியாதை செய்தார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பிரதமரின் கனவை நிறைவேற்ற, நாட்டு மக்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளனர். இதற்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். 2047-ம் ஆண்டுக்குள் அனைத்து அம்சங்களிலும் இந்தியா உலகின் முன்னணி நாடாகத் திகழும்” என தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஒற்றுமை தொடர் ஓட்டங்கள் நடத்தப்பட்டன.