தவெக மாநாடு நடைபெற்ற வி.சாலையில் அதிகாலையில் சீரான போக்குவரத்து : டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

மாநாடு முடிந்தவுடன் புறப்பட்ட வாகனங்கள் ஊர்ந்தபடி சுமார் 4 மணி நேரம் சென்றது. யூ-டர்ன் கூட போட முடியாமல் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி விழுப்புரம் வழியாக பயணித்தது. மாநாடு நடைபெற்ற வி.சாலை முதல் விழுப்புரம் வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரமானது. விழுப்புரத்திலிருந்து மாநாட்டு திடல் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 3 மணிக்கு பின்பே போக்குவரத்து சீரானது.

விழுப்புரம் – திண்டிவனம் வழியாக காலை 5 மணி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. வி.சாலையிலிருந்து விழுப்புரத்துக்கு நடந்து வந்தவர்கள் 3 மணி நேரத்தில் வந்துவிட்டாலும், பைக்கில் வந்தவர்கள் வருவதற்கு 5 மணி நேரமானது. இதனால் இப்பகுதியில் மொபைல் பயன்பாடு அதிகரித்ததால் இணையதள சேவை முடங்கியது.

பேருந்துகளில் மாநாட்டிற்கு வந்தவர்கள் வி.சாலையிலிருந்து விக்கிரவாண்டி சுங்கசாவடிக்கு 6 கிலோ மீட்டர் நடந்து வந்து அங்கு பூட்டப்பட்டு கிடந்த உணவங்களின் வாசல்களில் படுத்து தூங்கி எழுந்து, அதிகாலை இயக்கப்பட்ட பேருந்தில் தங்கள் ஊருக்கு பயணித்தனர்.

மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.