உதகை நகராட்சியுடன் கேத்தி பேரூராட்சியை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கேத்தி உட்பட 68 கிராம தலைவர்களுடன் மக்கள் கேத்தியில் ஆலோசனை நடத்தினர்.
இந்த அலோசனைக்கூட்டத்துக்கு கேத்தி 14 ஊர் தலைவர் சி.கே.என்.ரமேஷ் தலைமை வகித்தார். கேத்தி ஊர் தலைவர் சங்கர் மற்றும் 68 கிராம தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இதில், கேத்தி பேரூராட்சியை, உதகை நகராட்சியுடன் இணைத்து, உதகை மாநகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து ஊர் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்து கேத்தி பேரூராட்சியை பேரூராட்சியாகவே தொடர முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கூறியதாவது; கேத்தி பேரூராட்சியை உதகை நகராட்சியுடன் இணைத்தால் விவசாய நிலங்கள், பட்டா நிலங்களாக மாறி அனைத்து நிலங்களும் விற்பனை செய்யப்பட்டு, பொதுமக்களின் அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்த்தப்படும். இதனால் கேத்தி பேரூராட்சியில் உள்ள 18 வார்டு மக்களுக்கும் கேத்தி பேரூராட்சிக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து ஊர்களின் தலைவர்களாகிய நாங்கள், கேத்தி பேரூராட்சியை உதகை நகராட்சியுடன் இணைத்து, உதகையை மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பது என முடிவெடுத்திருப்பதுடன், உதகை நகராட்சியாகவே தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு 68 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கேத்தி கிராமத்தில் இருந்து ஊர்வலமாக எல்லநள்ளி பகுதிக்குச் சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.