2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வங்கி என்ற விருதை ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (எஸ்பிஐ) பெற்றுள்ளது. அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் இதழ் இந்த விருதை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் 31-வது ஆண்டுக்கான சிறந்த வங்கிக்கான விருது வழங்கும் விழாவில் இந்த விருது எஸ்பிஐ வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை எஸ்பிஐ தலைவர் சிஎஸ் செட்டி பெற்றுக் கொண்டார்.
எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளதன் அடையாளம் இந்த விருது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதிலும், நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் வங்கியின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக குளோபல் ஃபைனான்ஸ் வழங்கும் சிறந்த வங்கிக்கான விருதுகள் உலக நிதி நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான நம்பகமான தரத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.