புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், தேசிய தன்னார்வ இரத்ததான உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2024-ஐ முன்னிட்டு, 65 தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். அதன்படி, அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2024 உள்ள காலகட்டங்களில் 5,000 இரத்த அலகுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தன்னார்வ இரத்ததான தின உறுதிமொழியான ‘இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வ இரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி இரத்த தானம் செய்வேன். எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன்” என்ற உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வாசிக்க அதனை பின்தொடர்ந்து, மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எஸ்.கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.விஜயகுமார் (அறந்தாங்கி), இருக்கை மருத்துவ அலுவலர் மரு.ஆ.இந்திராணி, அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.ரமலதாராணி, கண்காணிப்பாளர் மரு.தையல்நாயகி, நோய் குறியியல் துறை பேராசிரியர் மரு.சித்ரகலா சுகுமார், மாவட்ட குறுதி பரிமாற்ற அலுவலர் மரு.எஸ்.சரவணன், வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.