அண்ணாமலை நவ.28-ல் லண்டனில் இருந்து தமிழகம் திரும்புகிறார் – ஜனவரியில் கிராமங்கள் தோறும் நடைபயணம்

லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ல் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அண்ணாமலை நடைபயணத்துக்கு திட்டமிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். அண்ணாமலை லண்டன் சென்றதால், பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்த தேதிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தவகையில், கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளை இந்த ஒருங்கிணைப்புக் குழு எடுத்து வருகிறது.

தற்போது, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக தமிழக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு, தொடர்ச்சியாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜகவின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதன்படி, ஜனவரி மாதம் இறுதியில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இந்த நடைபயணத்தை அண்ணாமலை தொடங்க இருக்கிறார். ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த முறை சட்டப்பேரவை தேர்தலை முன்னிருத்தி கிராமப்புற மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கு அண்ணாமலை தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தற்போது, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், நவம்பர் 28-ம் தேதி அண்ணாமலை தமிழகம் திரும்புவதால், வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என அரசியல் ஆர்வலர்கள் எதிர்நோக்குகிறார்கள்.