மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில்  கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் 

மும்பை பாந்த்ரா ரயில்முனையத்தில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் நிலையத்தின் நடைமேடை 1-ல் காலை 5.56 மணிக்கு பாந்த்ரா – கோராக்பூர் விரைவு வண்டி வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பிர்ஹான் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தெரிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களில் ஏழு பேரின் உடல்நிலை சீராக இருக்கிறது. இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்துக்குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் வினீத் அபிஷேக் கூறுகையில், “அதிகாலை 2.30 மணிக்கு வண்டி எண் 22129 அயோத்தியா விரைவு வண்டி பாந்த்ரா டெர்மினஸ் நிலையத்தின் நடைமேடை 1க்கு கொண்டு வரப்பட்டது. அப்போது நடைமேடையில் இருந்த பயணிகள் ஓடும் வண்டில் ஏற முயன்றனர். இதில் இரண்டு பயணிகள் கீழ விழுந்து காயம் அடைந்தனர்.

அப்போது பணியில் இருந்த ரயில்வே போலீஸார் மற்றும் ஜிஆர்பி மற்றும் ஊர்காவல் படையினர் உடனடியாக செல்பட்டு காயமடைந்தவர்களை அரசு பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஓடும் ரயிலில் ஏறுவதோ இறங்குவதோ ஆபத்தானது என்பதால் அப்படியான செயல்களில் ஈடுபடவேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 130க்கும் அதிகமான பண்டிகைகால சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.” என்று தெரிவித்தார்.

இதனிடையே சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “மும்பை பாந்த்ரா டெர்மினஸில் இன்று பாந்த்ரா – கோராக்பூர் ரயில் வரும் போது வண்டியில் ஏற கூட்டம் அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் திடீரென அதிகாரித்தது. இதில் 9 பேர் காயமடைந்தனர்.” என்றார்.