சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் : மயிலாடுதுறை ஆட்சியர் நடவடிக்கை 

மயிலாடுதுறை மாவட்டம், சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வெ.தெட்சிணாமூர்த்தியை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் கிராம ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கடந்த 2023 -ம் ஆண்டு ஏப்.20 -ம் தேதி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அரசு விதிகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதால், குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், ஊராட்சி ஆய்வாளருமான ஏ.பி.மகாபாரதியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிதழ் எண் 41, பகுதி 6, பிரிவு 2-ல் 9.10.2024 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வெ.தெட்சிணாமூர்த்தியை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வெ.தட்சிணாமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.