மதுரையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கேஎன்.நேரு, மதுரை பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் சுமார் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் மழையால் பாதித்த செல்லூர் கட்டபொம்மன் நகர், பந்தல்குடி வாய்க்கால், குலமங்கலம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அமைச்சர்கள் கேஎன். நேரு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் மதுரை ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பிறகு அமைச்சர் கேஎன்.நேரு கூறியதாவது: 18 குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றியுள்ளோம். இப்போது 4 இடங்களில் மழைநீர் தேங்காமல் வாய்க்காலில் செல்கிறது. மழைநீர் தேங்காமல் இருக்க, நிரந்தர தீர்வு காணப்படும் என, மக்களிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளோம். பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் சுமார் ரூ. 90 கோடி செலவில் தடுப்புச் சுவர் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
முதல்வரிடம் அனுமதி பெற்று பணிகளை விரைவில் தொடங்கப்படும். திடீரென 15 நிமிடத்தில் 8 செ.மீ மழை பெய்யும் என, எதிர்பார்க்கவில்லை. இது போன்ற அதிக மழை பொழிவு குறித்து தெரிந்து இருந்தால் மக்களை முகாம்களில் தங்க வைத்திருப்போம். 24 மணி நேரத்தில் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் மதுரை இயல்பு நிலைக்கு வந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.