இன்னும் 3 மாதங்களுக்குள் அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நம்முடைய முதல்வர் திமுகவின் ஒவ்வொரு அணிக்கும் பல்வேறு பணிகளை கொடுத்திருந்தார். அந்த வகையில் திமுக இளைஞர் அணிக்கு சட்டமன்ற தொகுதிகள் தோறும், 234 சட்டமன்ற தொகுதிக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்க வேண்டும். அதுமட்டுமல்ல என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டியை நடத்த வேண்டும் என்று கட்டளையிட்டார்.
இதுவரை தமிழகம் முழுவதும் 75 தொகுதிகளில் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை திறந்து விடுவோம் என்ற உறுதியை தலைவருக்கு நான் அளிக்கிறேன். அடுத்து கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி. இந்த பணியை ஏதோ நடத்தினோம், பரிசு தொகை கொடுத்தோம் என்று இல்லாமல், இந்த இயக்கத்துக்கு பயனுள்ள வகையில் நடத்த வேண்டும் என்று தலைவர் அன்பு கட்டளையிட்டார். நம்ம முதல்வர் என்ன எதிர்பார்த்தார்களோ அதை முழுமையாக நிறைவேற்றி தரும் வகையில் பேச்சுப்போட்டியை நடத்தியிருக்கிறோம் என்று இளைஞர் அணியினர் முழுமையாக நம்புகிறோம். அதற்கு பேச்சாளர்களும், பேச்சாற்றலுமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பேச்சுப்போட்டிக்கான அறிவிப்பு வெளியான போது, மாவட்ட அளவில் பங்ககேற்பதற்காக கிட்டத்தட்ட 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
மொத்தம் 47 இடங்களில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகளை நடத்தினோம். இந்த பேச்சுப்போட்டிக்காக 10 தலைப்புகள் வழங்கப்பட்டு இளைஞர் அணி சார்பில் 85 நடுவர்கள் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். சென்னையில் மாவட்ட, மண்டல மற்றும் இறுதி போட்டியை நானே நேரில் போய் பார்த்தேன். உங்களின் பேச்சை கேட்டு மெய்மறந்து ரசித்தேன். உண்மையிலேயே மிகவும் சிறப்பாக பேசுறீங்க. பேசுறதை கேட்கும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நம்முடைய திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. சரியான பேச்சாளர்களை கண்டுபிடித்து தலைவரிடம் ஒப்படைக்கிறோம் என்ற மனநிறைவும், பெருமிதமும் எனக்கு இப்போது இருக்கிறது.
மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற 17 ஆயிரம் பேரில் இருந்து, 913 பேரை பில்ட்டர் பண்ணி அவர்களை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க வைத்தோம். அந்த 913 பேருக்கும் தலா ரூ.10,000 ஊக்கத்தொகையை தாங்களாகவே முன்வந்து நம்முடைய மாவட்ட செயலாளர்கள் வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி, ஊக்கப்படுத்தினர். மண்டல அளவில் பங்கேற்கின்ற போட்டியாளர்களுக்கு 5 தலைப்புகள் கொடுத்தோம். இந்த 913 பேரை நல்ல அளவில் பட்டை தீட்ட வேண்டும் என்று நடுவர்கள் பயிற்சி கொடுத்தார்கள். 913 பேரில் இருந்து, 182 சிறந்த பேச்சாளர்களை நடுவர்கள் அடையாளம் கண்டு நம்மிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கான இறுதிப்போட்டிகள் சென்னையில் நேற்று நடந்தது. அந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள் தான். ஆனால், 3 பேருக்கு தான் பரிசு கொடுக்க முடியும்.
பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறும் நாமக்கல்லை சோந்த மோகநிதி, 2ம் பரிசு பெறும் செங்கல்பட்டை சேர்ந்த சிவரஞ்சனி, 3வது பரிசு பெறும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விஷ்வா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த போட்டியை பொறுத்தவரையில் என்ன சிறப்பு என்றால், ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பேச்சுப்போட்டியின் வெற்றியின் காரணத்தால் முதல்வரின் அனுமதியை பெற்று, ஒவ்வொரு வருடமும் ‘கலைஞர் நூற்றாண்டு என் உயிரினும் மேலான’ பேச்சு போட்டி நடத்தப்படும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.