தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு ஆன்லைன் சான்றிதழ் படிப்பு : அண்ணா பல்கலை.யில் அறிமுகம்

தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு தொடர்பான ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வித்துறை தேசிய பங்குசந்தையின் முழு மானியத்துடன் இயங்கும் என்எஸ்இ அகாடமியுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு (Financial Analytics) என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 11 மாத கால படிப்பில் பட்டதாரிகள், இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள், பணியில் இருப்பவர்கள், தொழில்முனைவோர்கள் சேரலாம். இதற்கான நேரடி ஆன்லைன் வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடைபெறும். மொத்தம் 3 பருவங்கள். பேராசிரியர்களும், நிதிச்சந்தை மற்றும் நிதி பகுப்பாய்வுத்துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் வகுப்பு எடுப்பார்கள்.

படிப்பின் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த படிப்பை முடிப்பவர்கள் பங்குச்சந்தை ஆய்வாளர், நிதி தொழில்நுட்ப ஆய்வாளர், நிதி ஆலோசகர், நிதி மேலாளர், முதலீட்டு ஆய்வாளர் போன்ற பணிகளில் சேரலாம். இந்த படிப்பில் சேர விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கான ஆன்லைன் நேர்முகத் தேர்வு டிசம்பரில் நடத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.