பணியின்போது பாதுகாப்பு வழங்குதல், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி முடித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஆக.27-ம் தேதி நடைபெற்றது. இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுக கூட்டமாகவே நடைபெற்றது. முதல்கட்ட பேச்சு முடிந்து சுமார் 2 மாதங்களான போதும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாதது தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐஎன்டியுசி, ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை, டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் நல சங்கம், அம்பேத்கர் அரசு போக்குவரத்து தொழிற்சங்க பேரவை, பாரத அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம், பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை ஆகிய 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரை இன்று சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும், ஓட்டுநர், நடத்துநருக்கு பணியின்போது பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக தொழிற்சங்கத்தினர் கூறினர்.