புதுக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று வழங்கினார்கள்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துதல், உதவித்தொகைகள் வழங்குதல், திறன் பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு, தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் உள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். மேலும் இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 1,736 வேலைநாடுனர்கள் கலந்துகொண்டு அவர்களின் தகுதிக்கேற்ப 414 (9 மாற்றுத்திறனாளிகள்) நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

எனவே, இம்முகாமில் பணிநியமன ஆணைகளை பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும், தங்களது வேலையினை சிறப்பாக மேற்கொண்டு, வாழ்க்கையில் சிறந்த நிலையினை அடைய எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்றையதினம் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில், இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெறுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்குகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல், தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு நடைபெறுதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற முகாம்களை மாணாக்கர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆகியோர் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) (மதுரை) ஆ.ஜோதிமணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன், பெ.வேல்முருகன் (தொ.வ), முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், உதவித் திட்ட அலுவலர் கே.தில்லைமணி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பெ.தெய்வானை, வட்டாட்சியர் பரணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.