வேதாரண்யத்தில் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகியான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வேதாரண்யத்தில் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அந்த நிலம் தேவைப்படும் நிலையில், அந்த நிலத்தை பேருந்து நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தியிருப்பது தவறானது. எனவே, எங்களது பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், மரியா க்ளேட் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.