பாரிசில் நடைபெற்ற ஐந்தாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் “கவிநயச் சுடர் “விருது பெற்ற புதுக்கோட்டைத் தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கமூர்த்திக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் “பழமையின் பெருமையை “பாதுகாப்பதில் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதாக ஞானாலயா குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தலைவர் முரு.வைரமாணிக்கம் தலைமை வகித்தார். ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். “உலகில் பழைமை மாறாமல் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கும் தேசம் இங்கிலாந்து. ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட கார்ல் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் சிலைகளை உடைந் தெரிந்தவர்கள் ரஷ்ய மக்கள். ஆனால் கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த இல்லத்தை அதேநிலையில் இன்றும், வரும் சந்ததிகள் காண, அப்படியே பராமரிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். இதையெல்லாம் நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும். இங்கிலாந்து சென்று பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். வாய்ப்புகிடைக்கும் ஒவ்வொருவரும் ஒரு சில நாடுகளுக்கு சென்று வர வேண்டும்.
அதே போல் இந்தியாவில் உள்ள அசந்தா ,எல்லோரா போன்ற புராதானச்சின்னங்களையும், ஹரித்வார், பத்ரிநாத் போன்ற ஆன்மீக இடங்களையும் தவறாது சென்று பார்க்க வேண்டும் என்று தனது சிறப்பிரையில் குறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியில் தனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் “கவிநயச்சுடர் “விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி. “நான் சமீபத்தில் பயணம் செய்த பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய தேசத்து மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நேசிக்கிறார்கள். மரங்களைப் பாதுகாக்கிறார்கள். சுற்றுச்சூழலை பாதிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. நான் பார்த்த தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு அளப்பறியது என்று குறிப்பிட்டார்.
நிகழ்விற்கு மருத்துவர் ச.ராம்தாஸ், ந.புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிநயச்சுடர் விருது பெற்ற தங்கம் மூர்த்தி அவர்களை முன்னாள் ரோட்டரி ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம், மருத்துவர் ந.ஜெயராமன், திருமதி சந்திரா ரவீந்திரன், முனைவர் சி.சேதுராமன், முனைவர் ராஜ்குமார், டாக்டர் சுபாஷ் காந்தி, கவிஞர் பீர்முகமது ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக சத்தியராம் இராமுக் கண்ணு வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் செய்திருந்தது.