ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

“சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால், திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ‘ திருநாடும்…’ என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும், தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைக் கண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார். துணை முதல்வர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இம்முறை மைக் சரியாக வேலை செய்ததால், பிழைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் நிறைவு செய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இத்திட்டத்தை, பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.” என்றார்.

அப்போது அவரிடம், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்னர், தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டாம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.