ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். ஒருவாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் என்ற பகுதியைச் சேர்ந்த ஷுபம் குமார் (19) என்ற வாலிபர் டிராலில் உள்ள படகுண்ட் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கைகைளில் குண்டுக்காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார்.
முன்னதாக அக்.20-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் சோனமர்க் என்ற இடத்தில் கட்டுமானப் பணி நடந்து வரும் ஒரு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மருத்துவர், 6 புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள், ககனீரை சோனாமர்குடன் இணைக்கும் இசட் – மோர்ச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான மறுமலர்ச்சி முன்னணி என்ற அமைப்பு 21-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. அதற்கும் முன்னதாக, அக்.18-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சோபியானா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சவுகான் என்பவர் சுட்டுக் கொல்லப்படடார். குண்டுக்காயங்களுடன் அவரது உடலை உள்ளூர்வாசிகள் ஜைனாபோராவில் உள்ள வடூனா என்ற இடத்தில் சாலையோரத்தில் கண்டெடுத்தனர். ஒருவாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.