பழனிசாமி இனி கனவில் தான் முதல்வராக முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியதாவது: ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அமமுக நிலைபாடு. தேசிய ஜனநாயக கூட்டணி 2026 தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும். மக்கள் விரோத பணநாயக திமுக ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராக உள்ளனர். மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் போராடும் நிலையில் தான் தமிழகம் உள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஏழைகளை ஏமாற்றி வெற்றி பெற்றதை போல் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மாணவர்களே போதைப் பொருட்கள் தயாரித்து பயன்படுத்தும் அளவுக்கு தமிழகம் மோசமாகி விட்டது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடந்திருப்பதன் மூலம் அமலாக்கத்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்பதை காணலாம். வைத்திலிங்கம் அதை சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் காவிமயமாகிவிட்டதாகச் சொல்வது திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் புரளி தான். பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி விடக்கூடாது என்ற சுயநலத்தால் கள்ளக் கூட்டணி வைத்து, திமுகவை வெற்றிடைய வைக்கிறார். அதிமுக தொண்டர்கள் நல்ல முடிவெடுக்காவிட்டால், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு பழனிசாமியே முடிவுரை எழுதிவிடுவார். பழனிசாமி இனி கனவில் தான் முதல்வராக முடியும்” என்று டிடிவி.தினகரன் கூறினார்.