கர்நாடகா மாநிலம், ஹோரமாவு அகரா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கட்டிட விபத்து நடந்த இடத்தை மாநில முதல்வர் சித்தராமையா இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்தார். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “இடிந்து விழுந்த இந்தக் கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வந்துள்ளது. மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழவில்லை. தரமற்ற பணிகளால் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பணி இடைநீக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மண்டல அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கான நிவாரணம் அவர்களை மருத்தவமனையில் சென்று பார்த்த பின்பு அறிவிக்கப்படும்.
பாஜக ஆட்சியின் போது இதுபோன்ற விபத்துச் சம்பவங்கள் நடைபெறவில்லையா? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது நானே நிறையமுறை சம்பவ இடங்களுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். யேலகங்காவில் இந்த முறை அதிக மழை பெய்துள்ளது. நாங்கள் எங்களின் பொறுப்புகளை மறந்து ஓடி ஒளியவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இடிபாடுகளை அகற்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தன. இந்தவிபத்து தொடர்பாக முனிராஜ்ரெட்டி, மோகன் ரெட்டி மற்றும் ஏழுமலை ஆகிய மூன்று பேர் மீது ஹென்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் முனிராஜ் ரெட்டியின் பெயரில் கட்டப்பட்டு வந்தது. அவரது மகன் புவன் ரெட்டியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் 4 மாடிக் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.