“சென்னை, கோவையில் இல்லாத அளவுக்கு மதுரையில் அநியாய வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யாமல் முறையாக கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது நியாயமில்லை” என்று மதுரை துணை மேயர் நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் ஏற்கெனவே சிபிஎம் எம்பி-யான சு.வெங்கடேசனுக்கும், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டு திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையே இன்னும் அடங்காத நிலையில், மதுரை மாநகராட்சியின் சிபிஎம் கட்சியின் துணை மேயர் நாகராஜன், மாநகராட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியது: “மதுரை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு, சொத்து வரியையும், பிற வருவாய் இனங்களையும் முழுமையாக வசூல் செய்யாததே முக்கிய காரணம். 100 வார்டுகளிலும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை 58 பேர் வரி பாக்கி வைத்துள்ளார்கள். ரூ.1 லட்சத்துக்கு மேல் 440 பேர் வரி பாக்கி வைத்துள்ளார்கள். 48 மத்திய, மாநில அரசு கட்டிடங்களில் ரூ. 8 கோடியே 69 லட்சத்து 67 ஆயிரம் வரி பாக்கி உள்ளது. இந்த வகையில் மட்டுமே ரூ.45 கோடியே 83 ஆயிரம் வரி பாக்கி உள்ளது.வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அவர்கள் வேறு சொத்துகளை வாங்க முடியாமல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாக்கி உள்ளவர்களிடம் பாக்கியை வசூல் செய்ய வேண்டும். வெளிப்படைத் தன்மையயுடன் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்து அனைவரும் பார்க்கும் விதத்தில் வெப்சைட்டில் பதிவிட வேண்டும். நிர்வாக காரணங்களால் மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு இன்னும் வரி விதிக்கப்படாமலே உள்ளது. மத்திய, மாநில அரசு கட்டிடங்களுக்கு சேவை வரி வசூல் செய்ய அரசாணை உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே நான் ஆணையாளருக்கு, வரி பாக்கி உள்ளவர்கள் விவரத்தை கடிதமாக அனுப்பி உள்ளேன். வரி பாக்கி உள்ளவர்களிடம் வரியை வசூலிக்காமல் முறையாக வரி கட்டுபவர்களுக்கு ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவது நியாயமில்லை.
மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் வாகன கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.32 லட்சமும், லாரி நிலையம் மற்றும் மீன் மார்க்கெட்டில் ரூ.33 லட்சமும் ஆண்டுதோறும் மாநகராட்சி நிதி விரயமாகிறது. ‘பார்க் லென்ஸ்’ என்ற சென்னையை சேர்ந்த பெங்களூருவில் பதிவு செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளே ஆன ஒரு கம்பனிக்கு மாநகராட்சி செலவில் கட்டிய பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தை வழங்கியுள்ளோம். அதில் கிடைக்கும் வருமானத்தை 41 சதவீதத்தை மட்டும் மாநகராட்சி வழங்கிவிட்டு மீதி 59 சதவீதத்தை அவர்கள் கொண்டு செல்வதற்கு 5 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மற்ற ஒப்பந்தமும் தர மாநகராட்சி தயாராகி வருகிறது.
முறையாக இந்த வருவாய் இனத்தை ஏலம் விட வேண்டும்.13 இடங்களில் உள்ள மாநகராட்சி கழிப்பறைகளை ஆய்வு செய்தபோது பழைய ஏலத்தொகையை ஒப்பிடும்போது 9 இடங்களில் மிக குறைவான தொகையே கட்டுகிறார்கள். 4 இடங்களில் பணமே கட்டாமலும் உள்ளனர். அதனால், மாநகராட்சிக்கு ரூ.81 லட்சம் விரயம் ஏற்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, இறைச்சிக்கூடம், புல் பண்ணைகள், முறையாக ஏலம் விடப்படுவதில்லை.
மார்க்கெட்டுகளில் கடைகள் எண்ணிக்கை குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. 8 தினசரி மார்க்கெட்டுகளை ஆய்வு செய்தபோது 6 மார்க்கெட்டில் குறைவாகவும் 2 மார்க்கெட்டுகளில் பணமே கட்டாமலும் ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தைகளில் 5 இடங்களில் ஆண்டிற்கு இழப்பு மட்டுமே ரூ.17 லட்சம் ஏற்பட்டு வருகிறது.
ஆட்டிறைச்சிக் கூடத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. புல் பண்ணைகள் ஏலம் விடப்படாமலே ரூ.1 லட்சம் வரை மாநகராட்சிக்கு குறைவாக பணம் கட்டப்படுகிறது. மாநகராட்சி அனுமதி பெற்று 100 வார்டுகளிலும் 293 பெட்டிக் கடைகள் உள்ளன. ஆனால், அனுமதி பெறாமல் 207 கடைகள் உள்ளன. சராசரியாக மாதம் ரூ.1,000 என்றால் 500 கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் மாநகராட்சிக்கு சாதாரண பெட்டிக்கடைகள் வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விளம்பரக் கம்பெனிகள் மாநகராட்சிக்கு பணம் கட்டுவதே இல்லை. ஆனால், விளம்பரம் வைக்கப்படுகிறது. பழைய ஏலம் எடுத்த தொகையையே 4 பேர் ரூ.9.5 கோடி பாக்கி வைத்துள்ளார்கள். தமிழகத்திலே சென்னை, கோவையைவிட மிக மிக அதிக வரி மதுரை மாநகராட்சியில்தான் உள்ளது. இது எந்த வகையில் நியாயம்? மதுரையில் எந்த தொழிற்சாலையையும் உருவாக்க இதுவரை இருந்த எந்த அரசும் முயற்சி எடுக்கவில்லை. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் மதுரை கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் உள்ளது.
அதிமுக, திமுக இரண்டு ஆட்சிகளிலும் மதுரைக்கென இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு எந்தப் பயனும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். சென்னையில்கூட இல்லாத நிலையில் மதுரை மாநகராட்சியில் குப்பை வரி அநியாயமாக விதிக்கப்படுகிறது. 100 சதுர அடி கடைக்கு சொத்து வரி ரூ.400, மாதந்தோறும் குப்பை வரி ரூ.1,000 வீதம் ஆண்டிற்கு ரூ.12,000 வசூல் செய்யப்படுகிறது. இந்த வரி நீக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு உத்தரவில் குப்பை வரி ரூ.200 மட்டுமே விதிக்கலாம் என்று உள்ளது. வரிபாக்கியை வசூல் செய்யக்கூடியவர்களிடம் வசூல் செய்து மாநகராட்சி நிதி விரயத்தை தடுத்து நிதி ஆதாரத்தை பெருக்க ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணி என்பது மதவெறி சக்தியை தடுப்பதற்கான அரசியல் நடவடிக்கை மட்டுமே. அதனுடன் கம்யூனிஸ்ட்களின் இயல்பான தொழிலாளர், மக்கள் விரோத போக்கைக் கண்டிக்கும் போராட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது” என்று மதுரை துணை மேயர் நாகராஜன் கூறினார்.