“எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். திருமண விழாவில் முதல்வர் பேசியதாவது: “தமிழகத்தில் மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக, திமுக ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக் கூடிய பழனிசாமி, திமுக அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து, மக்களின் உள்ளத்தில் பதிந்துக் கொண்டிருக்கிறதே, இன்னும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்துகொண்டிருக்கிறதே என்ற பொறாமை காரணமாக திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, திமுக கூட்டணி விரைவில் உடையப் போகிறது என்றும் கூறியிருக்கிறார். இதுவரை பழனிசாமி கற்பனையில்தான் மிதந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போதிலிருந்து அவர் ஜோசியராக மாறினார் என்று தெரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே அவர் சென்றிருக்கிறார்.
எங்களுடைய கூட்டணி என்பது, வெறும் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. எங்களது கூட்டணி கொள்கை கூட்டணி. எங்களுடைய கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது, என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை.
கூட்டணியில் விரிசல் ஏற்படாது. ரொம்ப ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல கவனித்துக் கொண்டிருக்கிறார். பழனிசாமிக்கு தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு யோக்கியதை இல்லை. மக்களிடம் வளர்ந்து நிற்கும் திமுகவையும், அரசையும் பார்த்து ஜோசியம் கூறிவருகிறார் பழனிசாமி” என்று முதல்வர் பேசினார்.