வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது. இந்நிலையில் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தொடர்ந்து, நாளை ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25-ந்தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பரவலாக மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் இன்று (அக்.22) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கர்நாடகா, அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 24 முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (அக்.22) திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (அக்.23) தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.