ஜபல்பூரில் நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய கொடியை வணங்கி ‘பாரத் மாதா கி ஜே’ கோஷமிட்ட நபர்

‘பாகிஸ்தான் வாழ்க’ என்றும் ‘இந்தியா ஒழிக’ என்றும் முழக்கமிட்ட நபர், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பைசல் நிசார் என்ற நபர், ஒரு வீடியோவில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்றும் ‘இந்தியா ஒழிக’ என்றும் முழக்கமிட்டுள்ளார். இது தொடர்பான புகாரில் பைசல் நிசார் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளின் கீழ் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி செவ்வாய்கிழமைகளில் ஜபல்பூர் காவல் நிலையத்தில் மூர்வணக் கொடியை வணங்கி 21 முறை பாரத் மாதா கி ஜே என சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்திருந்தது. இதையடுத்து இன்று காவல்நிலையம் வந்த பைசல் நிசார், நீதிமன்ற நிபந்தனையின்படி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி 21 முறை ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டார்.

ஏராளமான செய்தியாளர்கள் கூடி அதனை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைசல் நிசார், “நான் தவறு செய்தேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். உயர் நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டதை நான் கடைப்பிடிப்பேன். ரீல் வீடியோவுக்காக நான் பேசியதை ஒரு நபர் பதிவு செய்தார். நான் தவறு செய்துவிட்டேன். இனிமேல் இதை செய்யமாட்டேன். இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கூறுவேன்” எனக் குறிப்பிட்டார்.

ஜபல்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் மணீஷ் ராஜ் பதவுரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜாமீனில் வெளிவந்த பிறகு அவருக்கு இது முதல் செவ்வாய்கிழமை. சரியான நேரத்திற்கு இங்கு வந்த அந்த நபர், நீதிமன்ற நிபந்தனையின்படி தேசியக் கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்தி பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டார். இனி, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி செவ்வாய்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் அவர் இங்கு வந்து இதேபோல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் விசாரணை முடியும் வரை அவர் இவ்வாறு செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டார்.