‘திமுக ஆட்சியில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’ – சபாநாயகர் அப்பாவு தகவல்

“திமுக ஆட்சி அமைந்த பின்னர் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது”, என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்கள் சுமார் 1,100 பேர் கலந்து கொண்ட தடகள போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டிகளை தொடங்கி வைக்கும் விதமாக தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வெற்றியே பதில்” என்றார்.

மக்கள் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேசவிடாமல் சர்வாதிகாரியை போல சபாநாயகர் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சபாநாயகர், “கடந்த 30 ஆண்டு காலத்துக்குப் பின் இப்போது தான் ஜனநாயக முறைப்படி சட்டமன்றம் நடந்து வருவதாக முன்னணி தலைவர்கள் சொல்கிறார்கள், முன்னணி பத்திரிகைகள் சொல்கின்றன. சட்டமன்றத்தில் 70 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்குத்தான் பேச வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 132 பேர் இருக்கிறார்கள். 66 பேர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கூட சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு தான் இரண்டு மடங்கு நேரம் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்கள் கேள்வி நேரம் தொடங்கியதுமே கூச்சலிட்டுவிட்டு வெளிநடப்பு செய்துவிடுகிறார்கள். சட்டமன்றத்தில் கேள்வி நேரம், முக்கிய விவாதம், 110 விதியின் கீழான அறிவிப்புகள் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் தவறான வார்த்தைகள் பேசிவிட்டால் பெரும் பிரச்சினையாக உருவாகிவிடும். சட்டமன்றத்தில் பேசும்போது சபை அனுமதிக்காத வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதையும் கேட்டறிந்து விரைவில் அதுகுறித்தான அறிவிப்பு வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.