அதிமுக தலைமை பலவீனமாகி விட்டதால் யாரும் கூட்டணிக்கு தயாரில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் ஒற்றைக் கோரிக்கை. திமுக கூட்டணி உடைந்துபோகும் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறி இருக்கிறார். இது அவருடைய பகல் கனவு. திமுக கூட்டணியை உடைக்கவோ, எரிக்கவோ, கொளுத்தவோ, நொறுக்கவோ, நசுக்கவோ யாராலும் முடியாது. இவையெல்லாம் பழனிசாமியின் கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஏற்படாது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் 2 வரியை விட்டுவிட்டு பாடியதற்கு இவ்வளவு ஆவேசப்படுகிறார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அப்பாடலே இருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருக்கிறார். இது அவருடைய கருத்து. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாடப்பட்டு வரக்கூடிய ஒன்று. சீமான் இவ்வாறு கூறி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. தமிழ்நாடு, திராவிடம் இவை இரண்டும் இந்த தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எல்லாம் திராவிடம் சார்ந்த கட்சிகளாகத் தான் உள்ளன. திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒரு சொல். இதை, திராவிடர் கழகமும் திமுகவும் முன்னெடுத்துச் செல்லும். ஒரு கட்சியை வேறொரு கட்சி அழிக்கத் தேவையில்லை. ஒரு கட்சியின் தலைமை பலவீனமாகப் போய்விட்டால் அக்கட்சி தானாகவே அழிந்துவிடும். அதிமுகவுக்கு பழனிசாமியின் தலைமை பலவீனமாகி உள்ளது. அதிமுகவோடு கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. அவரும் கூட்டணியில் சேர்க்க வலை விரித்துப் பார்க்கிறார்.
ஆனால், அதிமுகவை எந்தக் கட்சியும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. தமிழகத்தில் திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் அமைய வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் திருமாவளவன் முதல்வராக முடியாது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுவதும், அவர் முதல்வராவார் என்று சீமான் கூறுவதும் அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பட்டிமன்றம். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.