“திருமாவளவன் முதல்வராகக் கூடாது என்று எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன்” – சீமான் 

“உள்ஒதுக்கீட்டை எதிர்த்ததால் திருமாவளவன் முதல்வராகக் கூடாது என எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன். 2 முறை தோல்விடையந்த அவர் மத்திய அமைச்சராகும்போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா என்ற உணர்வு, உரிமை, உறவில் கூறுகிறேன்,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி கலந்தாய்வுக் கூட்டம் கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெண்ணெய்மலையில் இனாம் நில உரிமை மீட்பு போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் இதற்கு, கரூர் நகர போலீஸார் அனுமதி மறுத்தனர். மேலும் வெண்ணெய்மலை பகுதியில் திரண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட மக்களை போலீஸார் கலைந்து போக அறிவுறுத்தினர். இதையடுத்து, கரூரில் தான் தங்கியருந்த ஹோட்டலுக்கு தன்னைச் சந்திக்க வந்த அந்த மக்களை சீமான் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியது:“உள்ஒதுக்கீட்டை எதிர்த்ததால் திருமாவளவன் முதல்வராகக் கூடாது என எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன். 2 முறை தோல்விடையந்த அவர் மத்திய அமைச்சராகும்போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா என்ற உணர்வு, உரிமை, உறவில் கூறுகிறேன். தமிழர் என்றால் அதில் பிராமணர்களும் வந்துவிடுவார்கள் என்பதால் திராவிடரை கொண்டு வந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை வந்ததால்தான் கருணாநிதி அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக்கினார்.

புதுச்சேரியில் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து சிறப்பாக உள்ளது. நாங்கள் பொறுப்புக்கு வந்தால் அதையே தமிழ்நாட்டுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கிவிடுவோம். பெரியார் மதுவுக்கு எதிராக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டினார். ஆனால், இன்றைக்கு சாராய ஆலை நடத்திக் கொண்டு பெரியாரை பற்றி பேசுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில்லை. சிறுபான்மை எனக்கூறிக் கொண்டு அவர்களுக்கு என்ன நன்மை செய்துள்ளார்கள். அவர்கள் கேட்பது உரிமை; சலுகையல்ல.

இடஒதுக்கீடு வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்? கருணாநிதியின் பேரன் என்பது தவிர துணை முதல்வராக உதயநிதியிடம் என்ன தகுதி உள்ளது? பிறப்பால் கிடைக்கும் உயர்வு தான் சனாதனம். சனாதனத்தை முதலில் உங்கள் வீட்டில் ஒழியுங்கள். துணை முதல்வராக வேறு ஒருவருக்கும் தகுதியில்லையா?

வாக்குக்கு பணம் கொடுப்பதுதான் திராவிடம். திமுக கூட்டணியில் உள்ளவர்கள் நான் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதால் என்னோடு கூட்டணி வைக்கத் தயங்குவார்கள். 8 சதவீதம், 16 சதவீதமாக, 32 சதவீதமாக வாக்கு சதவீதம் உயர்ந்தால் கூட்டணிக்கு வருவார்கள், காசு கொடுக்காமலும் வெற்றி பெறலாம் என தெரிந்து கொள்வார்கள். நம்மைப் பொறுத்தவரை எப்போதும் தனித்துப் போட்டிதான்.

நான் படபடவென பேசுபவன். விஜய் நிதானமானவர். தவெக மாநாட்டுக்கு பிற கட்சியினர் செல்வது சரியாக இருக்காது. முதலில் அவர் தனது கொள்கைகளை அறிவிக்கட்டும். திமுக தனித்து வெற்றிபெற முடியாது என்பதால், கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்குமாம். ஆனால், கூட்டணி அமைச்சரவைக் கேட்டால் முடியாது என்பார்களாம். திமுக பாஜகவை நெருங்கவில்லை. பாஜகவுடன் குடும்பமே நடத்திக் கொண்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களில் முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு உள்ளது. ஆனால், தமிழக முதல்வர் மீது வழக்குகள் இல்லை. முதல்வர், துணை முதல்வரை பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு திமுக போட்ட வழக்கு என்று முதல்வரே கூறியுள்ளார்.

தீபாவளி மது விற்பனைக்கு பல கோடி இலக்கு. பொழுதுபோக்கு திரைப்படத்துக்கு ஒருநாள் வசூல் ரூ.35 கோடி இப்படி செலவிடுபவர்களுக்கு இலவசம் எதற்கு? இலவசம் பெற்று வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது எனக்கூறி யாராவது இலவசம் வேண்டாமென்று கூறியுள்ளார்களா? இல்லையே. இலவசங்களை ஒழிக்க திமுக, அதிமுகவை அப்புறப்படுத்த வேண்டும். திமுக, அதிமுக இரண்டுமே தங்களை தவிர யாரும் ஆட்சிக்கு வாரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்” என்று சீமான் கூறினார். இந்தச் சந்திப்பின் போது கரூர் மேற்கு மாவட்ட நாதக செயலாளர் செல்வ.நன்மாறன், மருத்துவர் அணி நிர்வாகி கருப்பையா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.