காவலர் வீரவணக்க நாளில் சென்னையில் காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி மரியாதை

பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் பணியின் போது மரணம் அடைந்த தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் புஸ்பராஜ், தலைமை காவலர் குமரன், முதல் நிலைக் காவலர் கார்த்திகேயன், முதல் நிலைக் காவலர் விக்னேஷ் மற்றும் காவலர் ஜேசு ஆல்வின் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் 213 நபர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.

இன்று 21.10.2024), கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவல் துறை தலைமை இயக்குநரும் படைத் தலைவருமான சங்கர் ஜிவால், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.

அதனைதொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பிரார், காவல் துறை தலைமை இயக்குநர்கள், சென்னை காவல் ஆணையர் அருண், ஓய்வுபெற்ற காவல் துறை இயக்குநர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.