டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, தீ அணைப்புத்துறை, வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால் பள்ளியின் சுவர், அருகில் உள்ள கடை மற்றும் கார் சேதமடைந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, தீயணைப்பு வண்டிகள், வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து டிஎஃப்எஸ் அதிகாரிகள் கூறுகையில், “இன்று காலை 7.50 மணிக்கு சிஆர்பிஎஃப் பள்ளி சுற்றுச்சுவர் அருகே வெடிகுண்டு வெடித்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக நாங்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் அங்கே விரைந்து சென்றோம். அங்கு பெரும் தீ பரவலோ, யாரும் காயப்படவோ இல்லை. அதனால் நாங்கள் வாகனங்களுடன் திரும்பி விட்டோம்” என்றார்.
முதல்கட்ட ஆய்வில், வெடிப்புச் சம்பவத்துக்கு காரணமான பொருள் பெட்ரோல் குண்டாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனினும், முழு அறிக்கையும் கிடைத்த பின்னரே அனைத்து விபரங்களும் தெரியவரும் என்று தடைய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில் எந்த தீவிரவாத கோணமும் இந்த வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் கண்டறியப்படவில்லை. என்றாலும் எஃப்எல்எஸ் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் அனைத்தும் தெளிவாகும்.
இந்தச் சம்பவம் குறித்து, பட்டாசு வெடிப்பு போன்ற அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் தடையவியல் குழுவினர், குற்றப் பிரிவினர் வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் அந்தப் பகுதியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பின்னணியில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் 70 க்கும் அதிகமான விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.