சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சுனில்குமாரை நியமித்திருப்பது சட்டவிரோதமானது. அவர் எந்த தகுதியின் அடிப்படையில் அப்பதவியில் நீடிக்கிறார் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடிக்க தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க முடியாது. பதவியில் இருப்பவர்களை மட்டுமே நியமிக்க முடியும்” என வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.25 தேதிக்கு தள்ளிவைத்தார்.